அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம்

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரிக்க கோரும் வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு உள்ளாட்சி துறை ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம், பல கோடி ரூபாய் முறை கேட்டில் ஈடுபட்டிருப்பதாக திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த மாதம் 10ஆம் தேதி புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரணை செய்ய ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா அல்லது தலைமைச்செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளிவைத்தார்.

More News >>