அஸ்ஸாம்- சட்ட திருத்தத்திற்கு எதிரான முழு அடைப்புக்கு அனுமதியில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கும் 12 மணி முழு அடைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அம்மாநில நிதி மற்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சமய காழ்ப்புணர்ச்சி துன்புறுத்தலின் காரணமாக 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தவர், சமண சமயத்தவர், பார்ஸி சமயத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் செய்வதற்கான குடியுரிமை திருத்த மசோதா 2016ம் ஆண்டு மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அஸ்ஸாமில் 12 மணி நேர முழு அடைப்பு நடத்தும்படி கிறிஸ்காக் முக்தி சங்க்ராம் சமிதி மற்றும் அஸோம் ஜத்தியாதபதி யூபா சத்திர பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து அஸ்ஸாம் மாநில நிதி மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “மாநிலத்தில் முழு அடைப்புகள் மற்றும் பந்த் நடத்துவது அரசியலமைப்புக்கு மாறானது மற்றும் சட்ட விரோதமானது என்று 2013ம் ஆண்டு கௌஹாத்தி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, இந்த முழு அடைப்பை அனுமதிக்க முடியாது," என்று தெரிவித்துள்ளார்.

“அஸ்ஸாம் மக்களின் எதிர்காலமும் அடையாளமும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் முதல் முறையாக இப்போதுதான் பந்த் அறிவித்துள்ளோம். அதை திரும்ப பெற இயலாது," என்று கிறிஸ்காக் முக்தி சங்க்ராம் சமிதியின் தலைவர் அகில் கோகாய் கூறியுள்ளார்.

“தற்போதுள்ள சட்டத்தின்படியும், மாநிலத்தில் நிலவும் சூழலின்படியும் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து 26 வங்க அமைப்புகளை உள்ளடக்கிய அஸ்ஸாம் குடிமக்கள் உரிமை பாதுகாப்பு அரங்கம் (CRPFA) வரும் நவம்பர் 17ம் தேதி ஒழுங்கு செய்திருக்கும் கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது," என்றும் அமைச்சர் சர்மா தெரிவித்துள்ளார்.

More News >>