ஃபார்முலா 1- பின்லாந்து வீரர் கிமி ராய்கோனென் வெற்றி!
அமெரிக்காவின் கிராண்ட்பிரி போட்டியில் நடப்பு சாம்பியனான ஹாமில்டனை பின்னுக்கு தள்ளி, பின்லாந்து வீரர் கிமி ராய்கோனென் முதலிடம் பிடித்தார்.
கடந்த 17 சுற்றுகள் வரை முதலிடம் பிடித்து புள்ளிப்பட்டியலில் ஹாமில்டன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற 18வது சுற்றில் ஹாமில்டன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்த சுற்றில் 7வது இடத்தை பிடித்தாலும், சாம்பியன் பட்டத்தை ஹாமில்டன் தான் வெல்வார் என்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஆஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.
2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 1 மணி 34 நிமிடம் 18.634 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிமி ராய்கோனென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக கிமி ராய்க்கோனென் 2013-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி போட்டியில் வென்று இருந்தார்.
அவரை விட 1.281 வினாடிகள் பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். முதல் வரிசையில் இருந்து காரை செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2.342 வினாடிகள் பின்தங்கி 3-வது இடம் பிடித்து 15 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து இருந்தால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீவிஸ் ஹாமில்டனுக்கு போட்டியாளராக விளங்கும் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 4-வது இடம் பெற்றார். போர்ஸ் இந்தியா அணி வீரர் செர்ஜியோ பெரெஸ் 8-வது இடம் பிடித்தார். 18 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 346 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 276 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனேன் 221 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பார்முலா 1 பந்தயத்தின் அடுத்த சுற்று (19-வது) போட்டி மெக்சிகோவில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் 7-வது இடம் பிடித்தாலே 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடுவார்.