நுரையீரல் பாதிப்பினால் புகைப்பழக்கத்தை விட்டவரா? அப்போ தக்காளி, ஆப்பிள் கண்டிப்பா சாப்பிடுங்க..
புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அந்தந்த சிகரெட் டப்பாவிற்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புகைப்பிடிப்பவர்கள் தான் ஏராளம். புகைப்பிடித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும் என்பதும் அவர்கள் அரிந்ததே.
புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கட்டாயம் நுரையீரல் பாதிப்படைகிறது. சிகரெட் புகை உள்ளுக்குள் சென்று, அது வெளியே செல்ல முடியாமல் நுரையீரலுக்குள் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைய வைக்கிறது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிரை குடிக்கும் அளவிற்கு கொண்டு போய் விடுகிறது.
ஒரு சிலர் சைன் ஸ்மோக்கர்ஸ் எனப்படும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நுரையீரல் சாதாரணமாக புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலை விட வேகமாக பாதிப்படையும்.
தங்களின் உயிர் மீது பயம் வந்த பின்னர், ஒரு சிலரே புகைப்பழக்கத்தை கைவிடுகிறார்கள். ஆனாலும் அவர்களின் நுரையீரல் கண்டிப்பாக பாதிப்படைந்து தான் இருக்கும். இவர்களுக்கான அருமருந்து தான் தக்காளி மற்றும் ஆப்பிள்.
ஒவ்வொரு தனி நபரின் உடல் நிலையை கொண்டு சராசரியாக 30 வயதிற்கு மேல் மெல்ல மெல்ல நுரையீரலின் செயல் திறன் குறையும். நுரையீரலின் செயல் திறன் மிகவும் குறையும்போது, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய், இதய நோய் ஆகிய உயிர் கொல்லி பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக, தி ஜான்ஸ் ஹோப்கின்ஸ் புளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. இதில், ஜெர்மனி, நார்வே மற்றும் லண்டனில் இருந்து சுமார் 650 பேரை கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் புகைப்பழக்கத்தை விட்டவர்கள் மற்றும் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என்ற இரு பிரிவுகளின் கீழ் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு தினமும் 2க்கும் மேற்பட்ட தக்காளி, ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகள் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் செயல் திறன் சோதனையும் நடத்தப்பட்டது. இதன் முடிவில் நுரையீரலின் செயல் திறன் அதிகரித்ததோடு, நுரையீரலின் இளமையையும் மீட்கிறது. இதனை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் உதவி பேராசிரியர் வனேசா கார்சியா லார்சன் தெரிவித்துள்ளார்.
இதனால், தினமும் 2க்கும் மேற்பட்ட தக்காளி அல்லது ஆப்பிள் சாப்பிட வேண்டும். இந்த இரு பழங்களிலும் நுரையீரல் வலுவடைய தேவையான சத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர மற்ற பழங்களில் மூன்று பங்கு சாப்பிட்டு வந்தாலும், புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட்டவர்கள் நுரையீரல் பாதிப்பில் இருந்தும் விடுபடுவார்கள் என கூறப்படுகிறது.