பட்டாசு வெடித்து சிதறியதில் 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சின்னகாஞ்சிபுரம் நாகலத்துதெரு பகுதியில் வசிப்பவர் மதீன். இவர் அனுமதியின்றி நாட்டு பட்டாசு தயாரித்து விற்பனைக்காக வீட்டில் குவித்து வைத்திருந்தார்.

அந்த பட்டாசுகள் திடீரென இன்று வெடித்து சிதறியது. இதில் மதினின் மனைவி ஷகிரபானு, மகன் முஸ்தாக் மற்றும் பக்கத்துவீட்டுக்காரர் மஸ்தான் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். வீடு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் பெஞ்சமின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் பேசிய அமைச்சர் பெஞ்சமின், “சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

More News >>