ஈமச் சடங்கிற்கு செக் எழுதிவிட்டு தீ வைத்துக்கொண்ட பெற்றோர்
தங்களது ஈமச் சடங்கிற்காக ரூ. 2 லட்சம் எழுதி வைத்துவிட்டு பெற்றோர்கள் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரில் வசித்தவர் மனோகரன் (66). இவரது மனைவி ஜீவா (62). இருவரும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். இவர்களது மகன் சரவணன், மகள் கார்த்திகா. இருவரும் அதே பகுதியில் தனித் தனியாக வசித்து வருகின்றனர். மனோகரனும், ஜீவாவும் மட்டும் தனியாக வீட்டில் இருந்தனர்.
திங்கட்கிழமை இரவு மனோகரனின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து பார்த்தபோது படுக்கை அறையில் மனோகரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும், மற்றொரு அறையில் ஜீவா பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீ அணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 லட்ச ரூபாய் நிரப்பப்பட்ட இரண்டு காசோலைகள் மற்றும் மனோகரன் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், "நாங்கள் இறந்த பின்னர் எங்களது உடலை எரித்துவிடவும், புதைக்க வேண்டாம். ஈமச்சடங்கு மற்றும் காரிய நிகழ்ச்சிக்கு நான் கையெழுத்திட்ட காசோலையை பயன்படுத்திக் கொள்ளவும்" எனக் கூறப்பட்டுள்ளது.
காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேலும் மகள் கார்த்திகாவுக்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. தற்போது அவர் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். மகன், மகளின் திருமண வாழ்க்கை குறித்து கவலையடைந்த மனோகரனும், ஜீவாவும் மிகவும் கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.