டெங்கு கொசுவை வளரவிடாமல் தடுப்போம் ஆரோக்கியம் காப்போம்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோயைப் பரப்பும் கொசுக்களை வளரவிடாமல் தடுப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் டென்வி-1, டென்வி-2, டென்வி-3 வைரஸ் நல்ல தண்ணீரில் மட்டுமே வளரும் டெங்கு கொசு மூலம் பரவக்கூடியது.
இந்த கொசு, ஒரு முறையில் 300 முதல் 400 முட்டைகளை இடும். இது முட்டையிட 2 மில்லி தண்ணீர் இருந்தாலே போதுமானது. 21 நாட்களை சராசரி ஆயுளாகக் கொண்டது டெங்கு கொசு, இது 5 நாட்களுக்கு ஒருமுறை முட்டையிடக் கூடியது.
டெங்கு கொசு, இருளான மற்றும் குளிர்ச்சியான இடத்தில் இருக்கும் நல்ல தண்ணீரில் வளரும். வீடுகளில், மொட்டை மாடிகளில் சரியாக மூடப்படமல் போட்டு வைத்திருக்கும் பயனற்ற பொருட்களில் டெங்கு கொசுக்கள் முட்டையிடும். அதேபோல், பிளாஸ்டிக் கப்கள், பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிவறை பீங்கான், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தரைதளத் தொட்டிகள், திறந்தவெளி கிணறு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், டயர், உரல், தேங்காய் ஓடு, ஆகியவற்றிலும் டெங்கு காய்ச்சல்-ஐ பரப்பும் கொசுக்கள் முட்டையிடும்.
இதேபோல, வாழை மரங்களின் இலைக் கணுக்கள், அழகுக்கு வளர்க்கப்படும் விசிறி வாழைகளின் கணுக்கள் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் சிறிய அளவு தண்ணீர் ஆகியவற்றிலும் டெங்கு கொசு முட்டையிடும்.
இதனால், அவற்றில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன் தொட்டிகளில் தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். டெங்கு கொசு நல்ல நீரில் முட்டையிட்ட பின்னர், அதில் சில கொசுக்கள் உருவான பிறகு, தண்ணீர் வற்றிப்போனால், அந்த முட்டைகள் உறக்க நிலையை அடையும்.
மீண்டும் தண்ணீர் தேங்கினால் மீண்டும் லார்வாக்கள் உருவாகி, கொசுக்களாக உருமாறும். எனவே, தண்ணீர் தேங்கிய மேல்நிலைத் தொட்டிகள், உரல்கள், ஆகியவற்றை கழுவும்போது கிருமி நாசினியைப் பயன்படுத்தி, நன்றாக கழுவ வேண்டும். வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
எனவே, நல்லநீர் தேங்காமல், தூய்மையாக வைத்திருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நோயைத் தடுக்க முடியும். பொதுமக்கள் சுகாதாரமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தால் டெங்கு பரவாமல் தடுப்பதுடன் ஆரோக்கியமாக வாழமுடியும்.