2 மணி நேரம் மட்டுமே பட்டாசு! வெடிக்கும் பாஜக பிரபலங்கள்!
இந்தியா முழுவதும் பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்ற வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் பட்டாசு தயாரிக்க, பயன்படுத்த தடை இல்லை என்று கூறப்பட்டாலும் இந்த தீர்ப்பில் குறிப்பிட்ட நிபந்தனைகளில் ஒன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பெரும் அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று ராஜபாளையத்தில் கூறியதாவது: "சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள இந்த நிபந்தனை நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று,இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ" என்ற பயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இருந்ததில்லை என பாஜக கட்சியின் மக்களவை உறுப்பினரான சிந்தாமணி மாளவியா விமர்சனம் செய்துள்ளார்.
தீபாவளி பூஜை எப்போது நடைபெறும் நேரத்தை நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது என்று சிந்தாமணி மாளவியா தெரிவித்துள்ளார். பூஜை நேரத்தில்தான் பட்டாசு வெடிப்பார்கள் என்ற வழக்கத்தைகூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை விட வழக்கத்தைப் பின்பற்றுவதையே தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொது மக்களும் கூட தீபாவளி அன்று காலையில் சாமி கும்பிட்டுவிட்டு வெடி வெடிப்பது தான் வழக்கம் அது என்ன இரவில் வெடிப்பது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.