அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராத் கோலி, இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது. அதனை மனதில் கொண்டும் அணியின் ஸ்கோரை உயர்த்தவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 129 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் விளாசி 157 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் கடைசி வரை நின்று பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித்(4) மற்றும் தவான்(29) என சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு பொறுப்புடன் விளையாடி 80 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனியின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் இன்றைய போட்டி நடைபெறுவதால், ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், 25 பந்துகளுக்கு வெறும் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் 17 ரன்களுக்கும், ஜடேஜா 13 ரன்களுக்கும் அவுட்டாகினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அபாரமாக விளையாடிய விராத் கோலி, சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.
அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்:
259 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் படைத்த சாதனையை வெறும் 205 போட்டிகளிலேயே 10 ஆயிரம் ரன்களை கடந்து விராத் கோலி சச்சின் சாதனையை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். விராத் கோலி 81 ரன்களை கடந்த போதே இந்த சாதனையை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தனது சாதனையை முறியடித்த கோலிக்கு சச்சின் மனமார தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், உலக கிரிக்கெட் ஜாம்பவான்களும் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.