பிப்ரவரியில் லோக்ஆயுக்தா- தமிழக அரசு உறுதி
பிப்ரவதி மாதம் லோக்ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் என பொது ஊழியர்கள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. 15 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா நிறைவேற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தி, ஜூலை 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது. இதையடுத்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.