இனி குற்றாலம், கூவத்தூர் நாடகம் நடக்காது! தமிழிசை நக்கல்
தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்பார்த்ததாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எஎல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தகுதி நீக்கம் செல்லும் என அறிவித்துள்ளது. மேலும், அந்த எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் ரத்துசெய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவு செய்தவதாக தினகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:
"தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கொடுத்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சரி என்று கூறியுள்ளார். பல விஷயங்களை ஆராய்ந்துதான் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே, மேல்முறையீடு செய்தால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. மேல்முறையீட்டால் தேவையில்லாத குழப்பம்தான் ஏற்படும்". எனவும் தமிழிசை கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் "இது எதிர்பார்த்த தீர்ப்புதான். சபாநாயகருக்கு எம்எல்ஏக்களை நீக்க அதிகாரம் உள்ளது. இனி குற்றாலம் செல்வது, கூர்க் செல்வது, கூவத்தூர் செல்வது போன்ற நாடகம் நடக்காது." என நக்கல் செய்தார்.