உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்-மு.க.ஸ்டாலின்

18 எம்.எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளதாகக் தொடர்ந்து உடனடியாக காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ஒருவேளை அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதித்ததாக அவர் கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு என வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்" என்று கூறியுள்ளார்.

தீர்ப்பு என்பது மேலும் ஒரு அனுபவம் என டிடிவி தினகரன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி என்ன அனுபவத்தை அவர் பெற்றார் என்று தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

கேட்கக்கூடாதவருடைய பேச்சைக் கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்திருப்பதாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைத்தேர்தல் மட்டுமன்றி, எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி இடைத் தேர்தலில் வாக்குகள் கேட்போம் என்று தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்கக்கூடாதவருடைய பேச்சைக் கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்திருப்பதாக தெரிவித்தார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதாகவும் தர்மம் மறுபடி வென்றுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 

More News >>