எச்1பி விசா புதிய கட்டுப்பாடு எதிரொலி: ஏழரை லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த எச்1பி விசாக்கான புதிய கட்டுப்பாடு அமல் படுத்தினால், அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் முதல் ஏழரை லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு எச்1பி விசாவில் சென்றுள்ள இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில், இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் எச்1பி விசா மூலம் வந்து பணிபுரிந்து வருகின்றனர். எச்1பி விசாவில் அதிகபட்சமாக 3ஆண்டுகளுக்கு அங்கு பணிபுரியலாம். மேற்கொண்டு விசாவின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றால் அதற்காக விண்ணப்பித்து கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த முறையில் தான் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “பை அமெரிக்கன்ஸ் ஹையர் அமெரிக்கன்ஸ்” என்ற கொள்கையின் அடிப்படையில் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில், டிரம்ப் கடந்த சில மாதங்களாக எச்1பி விசாவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்1பி விசா மூலம் பணியாற்ற அமெரிக்காவிற்கு வருபவர்களின் மனைவிகளும் இங்கு பணிப்புரிய அனுமதி வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தார்.

இந்த சட்டத்தில் திருத்தம் செய்த டிரம்ப், எச்1பி விசாவில் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் மனைவிகள் இங்கு பணிப்புரிய கூடாது என்று அறிவித்தார். அமெரிக்கர்களின் நலன் கருதியும், அவர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை டிரம்ப் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் எச்1பி விசாவில் புதிய கட்டுப்பாட்டை டிரம்ப் அறிவித்துள்ளார். இதில், எச்1பி விசாவில் வந்தவர்களுக்கு விசாவின் ஆயுட்காலத்தை நீட்டிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, எச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வந்து கிரீன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் எச்1பி விசாவின் காலம் முடிந்ததும் கிரீன் கார்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை அவர்களின் சொந்த நாட்டிற்கே சென்று விட வேண்டும்.

இந்த திட்டம் விரைவில் அமல்ப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால் குறைந்தது 5 லட்சம் முதல் ஏழரை லட்சம் வரையிலான எச்1பி விசா பெற்ற இந்தியர்கள் வெளியேறும் அபாயம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “எச்1பி விசா மூன்று ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு தேவைப்படும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். விசாவின் ஆயுட்காலம் முடிந்ததும் விசா உரிமையாளர்கள் தங்களின் நாட்டிற்கு சென்றுவிட வேண்டும். கிரீன் கார்டுக்கு ஒப்புதல் பெற்றவர்கள் மட்டுமே விசாவின் ஆயுட்கால நீட்டிப்பை பயன்படுத்தி அமெரிக்காவில் இருக்கலாம்.

இதற்கான திட்ட அறிக்கையில், சுயேச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை யுஎஸ்சிஐஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு எச்1பி விசாவின் ஆயுட்காலத்தை ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். தேவைப்பட்டால் எத்தனை முறை வேண்டும் என்றாலும் விசாவின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். விசா ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்றாலும் அனுமதிக்க மறுக்கலாம்” என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி திட்டத்தால், எச்1பி விசா உரிமையாளர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகபட்சம் ஏழரை லட்சம் பேர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>