தீபாவளிக்குள் அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்த உத்தரவு!
சினிமாவில் பைரசி மிகப்பெரிய பாதிப்பை உண்டு செய்து வருகிறது. இதனை ஒழிக்க அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி பொருத்த சென்னையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் சிசிடிவி பொருத்த வேண்டும். வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் அது பொருத்தப்பட வேண்டும்.
2. பொருத்தப்பட்ட கேமராக்கள், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி ரெக்கார்ட் செய்யப்படும்.
3. வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு, திரைப்படம் தரப்பட மாட்டாது.
4. இனி அனைத்துக் காட்சிகளிலும், 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேரக் கண்காணிப்புப் பணிக்கு அமர்த்தப்படுவர்.
5. ஒவ்வொரு முறை படம் ஆரம்பிக்கும் முன்னர், திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.
6. படம் பார்க்கவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாகப் பரிசோதனை செய்யப்படும்.
7. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின், அதனை அந்தக் குழுவில் வைத்து ஆலோசித்து, அதற்குத் தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்தக் குழு கடுமையாகப் போராடும்.
இவ்வாறான தீர்மானங்கள் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.