எங்கிருந்து வந்தான்? போலீஸுக்கு உதவிய ஃபேஸ்புக்

சென்னை மடிப்பாக்கத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரின் வீட்டு முகவரியை காவல்துறையினர் முகநூல் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே வடநாட்டு வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த வாலிபர் இருசக்கர வாகனங்களை திருடும் நோக்கத்தில் அலைந்து திரிவதாகவும் அப்பகுதியினர் கூறினர்.   கடந்த செவ்வாய்கிழமையன்று காவல்துறையினர் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் நன்றாக ஆங்கிலம் பேசுவதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரது பெயர் தேவேந்திர தியான் என்பதை தவிர வேறு எந்த விவரத்தையும் தெரிந்து கொள்ள இயலாத நிலையில், மடிப்பாக்கம் காவல்துறையினர் சமூக ஊடகங்களில் அவரது பெயரை கொண்டு தேடினர். தேவேந்திர தியானுக்கு முகநூல் கணக்கு இருப்பதை அறிந்து, அவரைப் பற்றிய விவரங்களை அதில் பகிர்ந்தனர்.   முகநூல் பதிவினை பார்த்து சென்னையில் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர், தேவேந்திர தியானை தனக்குத் தெரியும் என்றும் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதையும் பகிர்ந்து கொண்டேதோடு, தியானின் பெற்றோரின் முகவரியையும் தொடர்பு எண்ணையும் காவல்துறைக்கு அனுப்பினார்.   அந்த எண்ணில் காவல் துறையினர் தொடர்பு கொண்டபோது, தேவேந்திர தியான், ஐடிஐ படித்தவர் என்றும், வேலைக்காக ஏஜெண்ட் ஒருவர் மூலம் கேரளா சென்றதும் தெரிய வந்தது. அவரை வேலைக்கென்று அழைத்து வந்த ஏஜெண்ட், தேவேந்திர தியானை ஏமாற்றியதோடு அவரது சான்றிதழ்களையும் திருடிச் சென்று விட்டதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.    எதிர்பாராத  ஏமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த தேவேந்திர தியான் மனநல பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. தியானின் பெற்றோர் ஒடிசாவிலிருந்து உடனடியாக வர இயலாத காரணத்தால், சந்திரசேகரும் ஆந்திராவிலிருந்து தேவேந்திர தியானின் உறவினர் ஒருவரும் புதன்கிழமை மடிப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.
More News >>