சிலைகள் காணவில்லை இதற்கு மாற்றம்தான் ஆன்மிக அரசியல் - தமிழிசை புது விளக்கம்
திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு சிலைகள் காணவில்லை; இதற்கு மாற்றம்தான் ஆன்மிக அரசியல் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அத்தோடு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், கட்சியின் பெயர், சின்னம், கட்சியின் கொள்கைகள் ஆகிய எதையும் அவர் அறிவிக்கவில்லை.
ஆனால், பாபா முத்திரை அவரது பின்னால் இருந்த திரையில் பிரதிபலித்தது. அத்துடன் வெண் தாமரை மலரின் சின்னமும் இருந்தது. இதனால், ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதினர். கடும் விமர்சனத்திற்கு பிறகு தாமரை அகற்றப்பட்டு வெறும் பாபா முத்திரை மட்டும் இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பாபா முத்திரையில் தாமரையை நீக்கியது ரஜினியின் தனிப்பட்ட முடிவு. இதில் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை. பாஜக அதிமுகவுடன் கூட்டணி, ரஜினியுடன் கூட்டணி என கூறுவது முற்றிலும் தவறு.
இதேபோல், ஆன்மிக அரசியலை காரணம் காட்டி காவி கட்சி, மதவாத கட்சி என பாஜகவை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு சிலைகள் காணவில்லை; இதற்கு மாற்றம்தான் ஆன்மிக அரசியல்” என கூறியுள்ளார்.