மனுக்களை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி: குஷியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

டெல்லியில், ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 27 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர்களது பதவி காப்பாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்எல்ஏக்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பதவி மூலம் எம்எல்ஏக்களுக்கு கூடுதலாக ஆதாயம் கிடைத்து வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரட்டை பதவி மூலம் ஆதாயம் பெறும் 27 எம்எல்ஏக்களை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனுக்கள் குவிந்தது. இந்த மனுக்கள் தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி அனுப்பினார். இதன்பிறகு, தேர்தல் கமிஷன் மனுக்களை பரிசீலித்ததை அடுத்து, இந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளை வழங்கியது.

அதன் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்து அதன் உத்தரவில் கையெழுத்திட்டார். இதன் மூலம், 27 எம்எல்ஏக்களின் பதவி தப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>