கருணாநிதியை சந்தித்த ரஜினிகாந்த் பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்!
புதிதாக கட்சித் தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளில் ஒருவரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். மற்றொருவரான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பொதுவெளிகளில் தலைகாட்டுவதை தவிர்த்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையில் நீண்ட காலமாக, அரசியலில் ஈடுபடுவதில் காலம் தாழ்த்தி வந்த நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என அறிவித்து அரசியல் சூட்டை கிளப்பி இருக்கிறார்.
இந்நிலையில், போய்ஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார்.
சரியாக மாலை 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் கருணாநிதியை சந்தித்து வணக்கம் தெரிவித்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக தெரிவித்தார்.
புதிய கட்சி தொடங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அரசியல், பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம். திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்து பலர் தோற்ற வரலாறு நமக்குத் தெரியும். அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட தமிழகம்” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பிற்கு பிறகு முதன் முறையாக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்தது குறித்து, ஸ்டாலின் காட்டமான விமர்சனத்தை வைத்தது, ரஜினிகாந்த் ரசிகர்களுகிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.