தமிழிசைக்கு சோபியாவால் வந்த புதிய பிரச்சனை!
தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து சோபியா என்றஆராய்ச்சி மாணவி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார்.
இதையடுத்து தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா அதற்கு மறுத்துவிட்டார்.
இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சோபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை தமிழிசை மற்றும் பாஜகவினர் மிரட்டியதாக மாணவியின் தந்தை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாணவி சோபியாவை மிரட்டியதாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.