18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு- மேல்முறையீடு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் மூன்று தினங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, 18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தினகரன் தலைமையில் மதுரையில் கூட்டம் நடந்தது. தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், பழிவாங்கும் நோக்கத்தோடு சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். தினகரனுக்கு ஆதரவு அளித்த ஒரே காரணத்தால் எங்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்." எனக் குற்றம்சாட்டினார்.

" மாறி வாக்களித்த பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறோம்"

"நிரபாராதி என்பதை இந்த உலகிற்கு நிரூபிப்போம். இரண்டு மூன்று தினங்களில் மேல்முறையீடு  வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைப்போம்" என தங்கதமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

More News >>