பிட்காயின் ஏடிஎம் - பெங்களூருவில் இருவர் கைது

பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டிற்கென பணம் வழங்கும் இயந்திரத்தை நிறுவியதற்காக தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்ச்சுவல் கரன்ஸி என்னும் மெய்நிகர் நாணயத்தை கையாளும் நிறுவனம் யூனோகாயின். பெங்களூருவில் கெம்ப்ஃபோர்ட் என்னும் வணிக மையத்தில் யூனோகாயின் நிறுவனத்தின் சார்பில் ஏடிஎம் என்னும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.

கிரிப்டோ கரன்ஸி என்னும் குறியாக்க நாணயத்தை வங்கிகள் எதுவும் கையாளக்கூடாது என்று ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிப்பு செய்துள்ளது. கிரிப்டோ கரன்ஸி சட்டப்பூர்வமானது அல்ல என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் யூனோகாயின் நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், பணம் செலுத்தும் வண்ணமும், எடுக்கும் வண்ணமும் யூனோகாயின் ஏடிஎம், கெம்ப்ஃபோர்ட்டில் வைக்கப்பட்டது. இவ்வகையில் இது முதல் ஏடிஎம் என்பதால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

உரிய அனுமதி இல்லாமல் தானியங்கி பண இயந்திரத்தை நிறுவியதற்காக யூனோகாயின் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான ஹரீஷ் (வயது 37), கடந்த செவ்வாய்கிழமை, சைபர் கிரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், அலைபேசி, கிரிப்டோ கரன்ஸி இயந்திரம் மற்றும் 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

"கிரிப்டோ கரன்ஸி சட்டப்பூர்வமானது அல்ல என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்படவில்லை," என்று கூறி வந்த நிலையில் புதன்கிழமை மற்றொரு நிறுவனரான சாத்விக் விஸ்வநாத்தும் (வயது 32) கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

"பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்ஸி என்னும் மெய்நிகர் பணத்தை அனுமதிப்பது சட்டவிரோதமான பரிவர்த்தனைக்கு உதவும்," என்று கடந்த ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>