ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கிடா விருந்து அளிக்கும் மதுரை ரஜினி ரசிகர் மன்றம்
ரசிகர்கள் சந்திப்பின்போது ரஜினி செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு சொன்ன விஷயத்தை, அவரது ரசிகர்கள் விரைவில் செய்ய உள்ளனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அன்று முதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
சந்திப்பின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவித்தார். அதில் நிச்சயம் அரசியலுக்கு வருவதாகவும் தன்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய ஆசை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ரசிகர்களுக்கு கிடா விருந்து அளிக்க ஆசை உள்ளதாகவும், இட சூழல் காரணமாக வைக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ரஜினி கூறியிருந்தார்.
ரஜினி செய்ய முடியவில்லை என்று கூறியதும் நாங்கள் செய்து காட்டுகிறோம் தலைவா என்று கூறுவது போல் மதுரை ரசிகர்கள் ரசிகர்களுக்காக கிடா விருந்து அளிக்க முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சுமார் 1000 ரஜினி ரசிகர்களுக்கு கிடா விருந்து அளிக்க திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 7ம் தேதி அழகர்கோவிலில் 1400 ரஜினி மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர் என்று மதுரை மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சென்னை அண்ணா நகரில் தினமும் ஆயிரம் ரசிகர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் ரஜினியை சந்தித்து வேலை இல்லாமல் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர கோரிக்கை விடுக்கவும் உள்ளோம்” என்றார்.ரஜினி செயலியில் இதுவரை மதுரையில் மட்டும் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.