காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது

சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும், துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே பனிப்போர் நிலவுகிறது. அதிகார மோதலால், ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். புதிய சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்ததே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனிடையே அங்கு வந்த காவல்துறையினர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தொண்டர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

More News >>