அலோக் வர்மான மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ அதிகாரிகள் மீதான லஞ்ச புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
10 நாட்களில் விசாரணையை முடிக்கும்படி நீதிபதிகள் ஆணையிட்டனர். 10 நாட்கள் போதாது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்ததை தொடர்ந்து, 2 வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.