மத்திய அரசின் கணக்கெடுப்பில் குளறுபடி? மீண்டும் ஆய்வு நடத்த கேரள அரசு முடிவு
கொச்சி: மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதால், இதில் தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய கேரள அரசு மீண்டும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, ‘புதிய முயற்சிகள் மற்றும் எத்தனங்கள்’ என்ற திட்டத்தின் கீழ், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பின் அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், கேரளாவில் 3054 யானைகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
ஆனால், கடந்த 2012ம் ஆண்டில் கேரளாவில் மொத்தம் 6177 யானைகள் இருப்பதாக அப்போதைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2012&2017ம் ஆண்டுகளுக்குள் யாணைகளின் எண்ணிக்கையில் பாதி சரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் பி.எஸ்.இசா கூறியதாவது: கடந்த 2015ம் ஆண்டில் நடத்திய விலங்குகள் கணக்கெடுப்பில், நாட்டில் மொத்தம் 30 ஆயிரம் யானைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, 2017ம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், 27312 யானைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
1970ம் ஆண்டில் வெறும் 12 ஆயிரம் யானைகள் தான் இருந்தது. யானைகளுக்கான திட்டத்தின் கீழ், வனத்துறை பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் 30 ஆயிரம் யாணைகள் இருந்தது. ஆனால், கடந்தி இரண்டு ஆண்டில் 2688 யானைகள் மாயமாகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் தவறு நடந்திருக்கிறது. கேரளாவில் மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் இதுபோன்ற தவறு நடந்திருக்கக்கூடும். அதனால், விரிவான மதிப்பீடு செய்து எங்கு தவறு நடந்திருக்கும் என்ற ஆய்வு நடத்தி, கேரளாவில் மீண்டும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.