விமர்சனம்: பாஸ் ஆகாத ஜீனியஸ்!

நல்ல கருத்தை கூற விரும்பிய இயக்குநர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் மூலம் கெட்ட முன் உதாரணத்தையோ அல்லது வாழ்வின் எதார்த்தம் இவ்வளவு தான் என்கிற கற்பனை வறட்சியினாலோ ஜீனியஸாக வரவேண்டிய படத்தை கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாக மாற்றி விட்டார்.

நன்றாக படிக்கும் தனது மகனின் திறமையை அறிந்து கொள்ளும் நாயகன் ரோஷனின் தந்தை ஆடுகளம் நரேன், இனி என் மகனை படிக்க வைத்து பெரிய ஆள் ஆக்குகிறேன் என்ற நோக்கில் படிப்பை மட்டுமே அவனுக்கு தினமும் திணிக்கிறார்.

இப்படியே வளரும் அவன், வேலைக்கு போகும் போது, மனநலம் பாதிக்கப்பட்டு, தனக்குத் தானே பேசிக் கொள்ளும் அளவிற்கு மாறிவிடுகிறான்.

இந்த லைன் வரைக்கும் கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் அவனை குணப்படுத்த சிங்கம் புலி அழைத்துச் செல்லும், மசாஜ் பார்லர்களும், பலான இடங்களும் தான், இந்த படத்தை குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ ஒரு பாடமாக அமையாமல் படத்தின் போக்கை மாற்றிவிடுகிறது.

படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல, உலகில் அனைத்து விதமான கலைகளையும் மனிதர்கள் கற்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் வளரும் பருவத்தில் நன்றாக விளையாட வேண்டும் இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கும் என்கிற கதை நன்றாக இருந்தாலும், இயக்குநர் இதற்கு தீர்வாக தரும் விசயங்களில் விசமங்கள் இருப்பதனால் தானோ பல ஹீரோக்கள் இந்த கதையை நிராகரித்தனர் என்பது இப்போது புரிகிறது.

தயாரிப்பாளர் ரோஷன் அறிமுக நடிகராக படத்திற்கு ஏற்றவாறு நடிக்க பெரிதும் முயற்சி செய்கிறார். ஆனால், அவர் இளைஞர் என்று சொல்வதை தான் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. படத்தின் நாயகி பிரியா லால், எந்த நாயகியும் முதல் படத்தில் இப்படி யொரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையை நம்பி படத்திற்கு போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே யுவன் கொடுத்துள்ளார். எந்த பாடலும் சிறப்பாக இல்லாதது படத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் ஜீனியஸ் ஜீனியஸான திரைக்கதை கொண்டு எடுக்காததால், பிலோ ஆவரேஜ் ஸ்டூடண்டாக மாறியுள்ளான்.

ஜீனியஸ் ரேட்டிங்: 2.25/5.

More News >>