தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சை - தினகரனை போட்டுத் தாக்கும் கமல்ஹாசன்

தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று ஆர்.கே.நகர் மக்களை நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு எழுதிவரும் தொடரில், கூறியுள்ள கமல்ஹாசன். “ஆ.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூட சொல்லமாட்டேன்.

ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

‘முதல்வர் தொடங்கி போர்ட்ஃபோலியோவில் கடைசிக்கட்ட அமைச்சர்வரை ஒவ்வொருவரும் இத்தனை வாக்காளர்களுக்கு, தலைக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று தொகை நிர்ணயித்து அதைக் கச்சிதமாகச் செயல்படுத்தியும் காட்டியதற்கான ஆதாரம் ஊடகங்களில் வெளியானது. அதனால் நின்ற இடைத்தேர்தல் மீண்டும் நடப்பதற்குள் ஆட்கள், அணிகள், சின்னங்கள் இடம் மாறின.

நின்ற தேர்தல் மீண்டும் நடந்தபோது, ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த (!) சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று… ஆர்.கே. நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன. தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக் கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்.

என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் ‘அடடா, ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது, இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது’ என்று பாராட்டுகிறார்கள்.

‘நாங்கள் பார்க்காத சிறைக்கூடங்களா, ரெய்டுகளா’ என்ற சுயேச்சையின் பதிலில் மயங்கிய என் ஊடக நண்பர்கள்கூட, ‘என்ன ஒரு நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்’ என்றும் போட்டிபோட்டுக்கொண்டு பாராட்டுகிறார்கள்.

சில அரசியல் அறிஞர்களும், ‘ஆஹா… இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்றும் பட்டியல்போட்டுப் பாராட்டுகிறார்கள். அவற்றில், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா’ என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஆகப்பெரிய அவமானம் எந்தப் புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பதுதான் எனக்குப் பிடிபடாத கேள்வி. இதுதான் புதிய புரட்சி என்றால், இன்றைய தேதி வரையிலும் நாம் பிரிட்டிஷின் காலனி ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாமே, எதற்கு அந்தப் பழைய சுதந்திரப் புரட்சி?

‘ரோடு போடுறான், ரயில் விடுறான். அது போதும் சார் நமக்கு. வைரம்தானே… கோகினூர் வைரம்தானே… சுரண்டிக்கொண்டு போகட்டும். நாம அவன் தர்ற ரோடு, ரயில்களை வெச்சுக்கிட்டு அடிமைகளா வாழ்ந்துட்டுப் போயிடலாமே’ என்கிற அதே பழைய குணாதிசயம் நல்லதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News >>