காரை அனுமதிக்க மறுப்பு-காவலர்களுடன் வைகோ வாக்குவாதம்

ஸ்டெர்லைட் ஆய்வு குழு கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த வைகோவின் வாகனத்தை அனுமதிக்க மறுத்த காவலர்களுடன் அவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, அப்பகுதி மக்களை கேட்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை முடித்த அந்த குழு, இந்த வழக்கின் எதிர்மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்களை நேரில் சந்தித்து ஆவணங்கள், கருத்துக்களை குழு கேட்டறிந்து வருகிறது.

அந்தவரிசையில் கருத்து கேட்பு கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மகாலில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் சி.எஸ்.வைத்தியநாதன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது, வைகோ வந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்தனர்.

காரைவிட்டு கீழே இறங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காரணம்கேட்டு காவலர்களுடன் வாக்குவாதம் செய்தார். பதிவாளர் உத்தரவின்படி, கார் நிறுத்தப்பட்டதாக காவலர்கள் விளக்கம் அளித்தனர். இதனால் சிறிது நேரம் சேப்பாக்கம் கல்சாமகால் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

More News >>