அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம்!

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்ட நிலையில் அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது.

அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தியது. இதனால், 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர். 3-வது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இந்த 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தினசபாபதி (அறந்தாங்கி) பிரபு (கள்ளக்குறிச்சி) கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டதால், தங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று இவர்கள் 3 பேரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்காத பட்சத்தில் கொறடா ராஜேந்திரன் மூலம் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ப.தனபாலிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரிடம் அவரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார். அதற்கும் அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களை போல் இவர்களும் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

எனவே, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் ரத்தினசபாபதி, பிரபு கலைச்செல்வன் ஆகிய 3 பேர் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரியவரும். இதேபோல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் (திருவாடானை) தற்போது அதிமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவரிடமும் விளக்கம் கேட்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

More News >>