விசாரணை ஆணையத்திடம் சிக்கும் ஜெ. உதவியாளர், குடும்ப மருத்துவர்
வரும் 8ம் தேதி ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9ம் தேதி ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட 5 பேர் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் இது தொடர்பாக சசிகலா உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வருகின்ற 8ஆம் தேதி ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9ஆம் தேதி ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், 10ஆம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமி, 11ஆம் தேதி மருத்துவர் பாலாஜி, 12ஆம் தேதி இதயநோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.