சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிக்கு நினைவு இல்லமா? - டிராபிக் ராமசாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைக்கக் கூடாது என்று ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டை அரசே எடுத்து கொண்டு நினைவிடமாக மாற்றும் பணியை செய்ய உள்ளது.

நில ஆர்ஜித சட்டப்படி வீட்டை அரசு எடுத்து கொள்ளும். அந்த வீட்டுக்கு என்ன விலை மதிப்போ அது ஜெயலலிதாவின் சட்டப் பூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெற்றன.

இதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து வீடு முழுவதும் அளவிடும் பணியை செய்தனர். ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைக்கக் கூடாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

More News >>