கோவா முதலமைச்சரின் உடல் நலம்- முக்கிய தகவலை கூறிய அமைச்சர்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல் நலிவுற்றுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சிகிச்சைக்காக சென்ற அவர் பின்பு எய்ம்ஸ் (AIIMS) என்னும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது வீட்டிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே, மனோகர் பாரிக்கரை பாதித்துள்ள நோய் எது என்பதை கூறியுள்ளார்.

சனிக்கிழமை (அக்டோபர் 27) கோவா மாநிலம் அல்டோனா என்ற இடத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே, முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

பாரிக்கருக்கு கணையத்தில் பிரச்னை இருப்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு சிகிச்சைக்காக சென்றார்.

திரும்பிய அவருக்கு, செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவாவில் தமது இல்லத்திற்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து திரும்பி பின்னர் இதுவரை அவர் அலுவலத்திற்கு வரவில்லை. அமைச்சரவை கூட்டத்திற்கும் தலைமை தாங்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிதேந்திரா தேஸ்பிரபு, முதல் அமைச்சருக்கான பணிகளை பாரிக்கர் கவனிப்பதை குறித்த ஒளிப்பதிவினை நான்கு நாட்களுக்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில் முதல்வரின் உடல் நலம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

"நீதிமன்றத்தை நாடுவது காங்கிரஸின் விருப்பம் என்றால் அவர்கள் அப்படி செய்யட்டும். முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர் மிகவும் பெலவீனமாக இருக்கிறார்.

தமது குடும்பத்தினருடன் அமைதியாக சமாதானமாக நேரத்தை செலவிடவேண்டியது அவசியமான ஒன்று. வீட்டிலிருந்தே முதல்வர் பணிகளை கவனித்து வருகிறார். ஆகவே, அரசின் செயல்பாடுகளில் எந்தத் தொய்வும் இல்லை," என்று ரானே கூறியுள்ளார்.

பாரிக்கரின் உடல் நலிவினை தொடர்ந்து, மாற்று ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பாரதீய ஜனதா குழு ஒன்று கோவா சென்றது. ஒத்த கருத்து எட்டப்படாததால், பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பாரிக்கரே கோவா முதல் அமைச்சராக தொடருவார் என்று டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

உள்துறை, நிதி, கல்வி, தொழிற்சாலை, சுரங்கங்கள் போன்ற முக்கிய துறைகள் உள்ளிட்ட 30 துறைகள் தற்போது முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் வசம் உள்ளன. அவற்றுள் சில துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More News >>