இரு நாட்டு உச்சி மாநாடு- ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
இந்தியா -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஞாயிறு, திங்கள் (அக்டோபர் 28, 29) ஆகிய இரு தினங்களும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ ஏபேயை யமானாக்ஷி நகரில் அமைந்துள்ள அவரது விடுமுறை இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். யமானாக்ஷி நகர், டோக்கியோவிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த நகரமாகும்.
3,776 மீட்டர் உயரம் கொண்ட ஜப்பானின் உயர்ந்த சிகரமான ஃபிஜி இங்கு உள்ளது. பிரதமரின் இல்லத்தில் இரவு விருந்துக்கு பிறகு இரு தலைவர்களும் தொடர்வண்டி மூலம் டோக்கியோ புறப்பட்டு செல்கின்றனர்.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக சந்தித்த பிறகு இப்போது 12வது முறையாக ஜப்பான் பிரதமரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் ஜப்பான், இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த நட்புநாடு என்றும் கூறியுள்ளார்.
இந்தியா வருடாந்திர உச்சி மாநாடுகளை இணைந்து நடத்தும் ஒரு சில நாடுகளுள் ஜப்பானும் ஒன்று. இரு தரப்பு விஷயங்கள் மட்டுமின்றி, இந்திய பசிபிக் பிராந்தியம் உள்பட மண்டல மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடுவார்கள் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்பட, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களில் ஜப்பான் அரசும், ஜப்பானிய முதலீட்டாளர்களும் இணைந்து செயல்படுவார் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.
பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க இருக்கும் பாரத பிரதமர், டோக்கியோவிலுள்ள இந்தியர்களையும் சந்திக்க இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெறுவது 13வது இந்திய ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஆகும். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 5வது உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.