ரபேல் ஒப்பந்தம் குறித்த அரசின் கொள்கை முடிவு- நீதிமன்றத்தில் தாக்கல்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ரபேல் ஒப்பந்தம் குறித்து, 3 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதானவிசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், பாதுகாப்புத் துறை மேற்கொண்ட கொள்முதல் குறித்த விவரங்கள், நாட்டின் பாதுகாப்பு கருதி, தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ வழங்கப்படுவதில்லை. மேலும், ராணுவ விவகாரங்களைப் பொதுநல மனுக்கள் வாயிலாக விசாரிக்கமுடியாது.

முக்கியமாக, ராணுவ கொள்முதல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, இவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் விவகாரம்குறித்து, தற்போது உச்ச நீதிமன்றம் எதையும் உறுதி செய்யவில்லை.

ஆனால் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒப்பந்தத்துக்காக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்த அடிப்படை விவரங்களையும் உச்ச நீதிமன்றம் விரிவாக அறிந்துகொள்ள விரும்புகிறது.

ஆகவே, அது தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வருகின்ற 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் புரிதலுக்காக, மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கமே தவிர, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

More News >>