இனி ரத்தக் கூறுகள் தானம் செய்யும் அரசு ஊழியருக்கும் சம்பளத்துடன் விடுமுறை
புதுடெல்லி: ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள் தானம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என மத்திய பணியாளர்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தானத்திலே சிறந்த தானம் ரத்த தானம். ஒருவரது உயிரை காப்பாற்ற செய்ய கூடிய தானம் தான் மிகப்பெரியது என கூறுவார்கள். நாடு முழுவதும் பல்வேறு ரத்த தான வங்கிகள் உள்ளன. இங்கு, நாம் தானம் செய்யும் ரத்தம் சேமித்து வைத்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கி உயிரை காப்பற்றப்படுகிறது.
இதனால், ரத்தம் தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ரத்தம் தானம் செய்பவர்களுக்கு சலுகை வழங்கிய நிலையில் ரத்தக்கூறுகள் தானம் செய்பவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
இதுகுறித்து, மத்திய பணியாளர்கள் துறை அமைச்சகம் கூறுகையில், “ மத்திய அரசு ஊழியர்களுக்கான விதியில் இதுவரை ரத்த தானம் செய்பவர்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி, சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா உள்ளிட்ட ரத்த கூறுகள் தானம் செய்வதற்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், ரத்த கூறுகள் அதிகளவில் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் ரத்த தானம் செய்யும் பட்சத்தில், அதற்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பித்தால், அன்றைய தினத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் ” என்றது.