சர்கார் கதை திருட்டு கதையல்ல: ஜெயமோகன் விளக்கம்!

சர்கார் திரைப்படத்தின் கதை செங்கோல் எனும் கதையை திருடி எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஜெயமோகன் மறுத்துள்ளார்.

விஜய் படங்கள் என்றாலே சமீபத்தில், கதை திருட்டு பிரச்சனைகள் பூதாகரமாகி வருகின்றன. தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள சர்கார் படத்தையும் இந்த கதை திருட்டு பிரச்சனை விட்டு வைக்கவில்லை.

வருண் என்பவர் தான் எழுதி 2007ஆம் ஆண்டு பதிவு செய்த செங்கோல் படத்தின் கதையை ஏ.ஆர். முருகதாஸ் திருடி சர்கார் படத்தை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன்னிறுத்தினார். திரைக்கதையாசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.பாக்கியராஜ் அவர்களும் இரண்டும் ஒரே கதையென ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய ஜெயமோகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதல்ல என்றும் கள்ள ஓட்டு என்ற ஒரு பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்கார் படத்தின் டிரெய்லரில் வரும் காட்சிகள் அனைத்தும் கடந்த ஓராண்டுக்குள் நடந்த உண்மை சம்பவங்கள் என்றும், ஹீரோ கதாபாத்திரம் சுந்தர் பிச்சையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இதனால், 2007ல் இந்த காட்சி அமைப்புகள், கதையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு சர்கார் ரிலீஸ் உறுதியாகியுள்ள நிலையில், கடைசி கட்டத்தில் வேறு பிரச்சனைகள் கிளம்பினாலும், கிளம்பலாம் என படக்குழு பீதியில் உள்ளது.

 

More News >>