ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு அசத்தல் சதம் இந்தியா அபார வெற்றி!

இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தை இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் சமனில் முடிய, மூன்றாவது ஆட்டத்தில் மேற்கிந்திய அணி கைப்பற்றியது. இதனால், 1-1 என்ற நிலையில், இரு அணிகளும் இருந்தன.

இந்நிலையில், மும்பையில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தின.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடாமல் 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய கோலி, 3 போட்டிகளில் தொடர்ந்து சதமடித்த நிலையில், இன்றைய போட்டியில் வெறும் 16 ரன்களிலேயே அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவுடன் அம்பத்தி ராயுடுவும் நல்ல பார்டனர்ஷிப் கொடுத்தார்.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 137 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 20 பவுண்டரிகள் விளாசி மொத்தம் 162 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அம்பத்தி ராயுடுவும் அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் அடித்து 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி 23 ரன்களுக்கு அவுட்டானார். இறுதி வரை அவுட்டாகாமல் விளையாடிய கேதார் ஜாதவ் 16 ஜடேஜா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 50 ஓவர் நிறைவடைந்தது.

இதனால் 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் என்ற இமாலய ரன்னை சேஸாக அளித்தது.

378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான கலீல் அகமது மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

புவனேஷ் குமார் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால், 36.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி ரோகித் சர்மாவின் ஸ்கோரை கூட எடுக்க முடியாமல் 224 ரன்கள் வித்தியாசத்தில் வெறும் 153 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் இந்திய அணி டிரா செய்தாலும் வெற்றியை பெற்று விட முடியும்.

More News >>