படேல் சிலை: முதலில் சிபிஐக்குள் ஒருமைப்பாட்டை கொண்டு வாருங்கள் - குஜராத் முன்னாள் முதல்வர் சீற்றம்

ஒருமைப்பாட்டின் சிலை என்று கூறப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறப்பதற்கு முன்னர் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கியாகிய ஆர்பிஐ ஆகிய முக்கிய அமைப்புகளுக்குள் ஒருமைப்பாட்டை கொண்டு வாருங்கள் என்று குஜராத் முன்னாள் முதல்வர் சங்கேர்சிங் வகேலா, பிரதமர் மோடிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.   இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் ஏறத்தாழ 3,000 கோடி ரூபாய் மதிப்பில் 182 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி அச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.   திங்கள்கிழமை இது குறித்து காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில முன்னாள் முதல்வர் வகேலா, "எந்த ஒருமைப்பாட்டைக் குறித்து தற்போது பேசப்படுகிறது? முதலில் சிபிஐ, ஆர்பிஐ ஆகிய அமைப்புகளுக்குள் ஒற்றுமையை கொண்டு வரட்டும். சரிந்து வரும் இந்திய பணத்தின் மதிப்பை காப்பாற்றட்டும். பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலையை குறைப்பதில் ஒருமைப்பாட்டை கொண்டு வரட்டும்," என்று கூறியுள்ளார்.   எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர் வகேலா. பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர் குஜராத் முதல்வராக குறுகிய காலம் பதவியில் இருந்தார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.   குஜராத் மாநிலம் 2 கோடியே 50 லட்சம் கோடி அளவுக்கு கடனில் இருக்கும்போது பாரதீய ஜனதாவின் மலிவான நோக்கத்திற்காக 3,000 கோடி ரூபாய் வீணாக்கப்பட்டுள்ளது. சர்தாரின் புகழுக்கு இழுக்கான விஷயம் எதுவும் இதுவரை நடக்கவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி செலவில் சிலை அமைப்பது அவரது எளிமைக்கும் மனப்பான்மைக்கும் எதிரானது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, தேவே கவுடா பிரதமராக இருந்தார். அப்போது அஹமதாபாத் விமான நிலையத்திற்கு சர்தார் வல்லபாய் படேலின் பெயர் சூட்டப்படுவதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர் என்று வகேலா கூறியுள்ளார். வல்லபாய் படேலுக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை உலகத்திலேயே உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
More News >>