சென்னையில் அதிகாலை முதல் கனமழை: வெயில் தணிந்தது
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால், சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தென்மேற்கு பருவமழை முடிந்தது. இதனால், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக, சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
வடகிழக்கு பருவழை தாமதத்தால், சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், எதிர்பாராத நிலையில், மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சயடைந்துள்ளனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.