நடிகர் சிவகுமார் செய்தது சரியா? தவறா?

அனுமதி இல்லாமல் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை கோபத்துடன் நடிகர் சிவகுமார் தட்டிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் சிவகுமார். அப்போது, ரிப்பன் வெட்டும் இடத்தில், இளைஞர் ஒருவர், அவரிடம் அனுமதி கேட்காமல் செல்ஃபி எடுக்க முற்பட்டார். உடனடியாக உணர்ச்சி வசப்பட்ட சிவகுமார் அவனது போனை தட்டிவிட்டார்.

இந்த செயல் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பழம்பெரும் நடிகர் என்றும் பாராமல் அவர் மீது பல மீம்களை இளைஞர்கள் அள்ளித் தெளித்துள்ளனர்.

நம்ம வீட்டில் பெரியவர் ஒருவருக்கு முன்னர் பேசவே அஞ்சப்படுவோம். அவருக்கு மரியாதை கொடுக்கவேண்டும். சிவகுமாரின் ஒழுக்கம் மற்றும் பண்புகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே. விழா முடிந்தவுடன் புகைப்படம் எடுக்க கேட்டிருந்தால் அவரே போஸ் கொடுத்திருபார். இதற்கு முன்னரும் பல ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். மீம்கள் வரவே இதற்கு விளக்கமும் சிவகுமார் அளித்துள்ளார்.

அதில், ”செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?”

”தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?”

”நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

நாம் சின்ன சின்ன விசயத்துக்கு எப்படியெல்லாம் கோபப்படுகிறோம் என்பதை கேமரா கண்கள் வழியே பார்த்தால் வாழ்க்கையை வாழ முடியாது. பொது இடத்தில் பிரபலங்கள் வந்தால் அவர்கள் மேல் விழுவது. பெண் நடிகைகள் என்றால், அவர்களின் பாகங்களை தவறாக தொடுவது என ரசிகர்கள் என்ற போர்வையில் இவர்கள் செய்யும் சில்மிஷங்களுக்கு சிவகுமார் செய்த விசயம் தவறாக தோன்றவில்லை. அது ஒரு சாதாரண மனித மனத்தின் அந்த நேரத்தின் உண்மையான வெளிப்பாடு மட்டுமே!

செல்ஃபி மோகத்தால் எத்தனை இளைஞர்கள் உயிர் இழப்புகளை சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News >>