மாணவர்களை தவறான உறவுக்கு வலியுறுத்தல்: பீஹாரில் ஏழு பேர் கைது

பீஹார் மாநிலத்தில் விடுதி மாணவர்களை கொடுமைப்படுத்தி தவறான உறவு கொள்ள வற்புறுத்தியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஹூசாரி மாவட்டத்தில் குஸ்வாகா என்ற தனியார் விடுதி உள்ளது. இங்கு தங்கியிருந்த நான்கு மாணவர்களை ஒரு கும்பல் கடந்த புதன்கிழமை அன்று கடத்தியுள்ளது. 18 முதல் 21 வயதுடைய அந்த மாணவர்களை பெஹூசாரி சிறைச்சாலைக்கு பின்புறம் கொண்டு சென்று கொடுமைப்படுத்தியுள்ளனர். மது அருந்தும்படி கட்டாயப்படுத்தியதோடு உடைகளை களைந்து ஒருவருக்கொருவர் தவறான உறவு கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். இதை ஒளிப்பதிவு செய்ததுடன், தங்களைப் பற்றி புகார் தெரிவித்தால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வியாழன் அன்றே கோலு குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கோலு குமார் நடத்தி வந்த தண்ணீர் சுத்திகரிக்கும் நிறுவனத்தில் தண்ணீரை வாங்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் மறுத்ததன் காரணமாக இந்தக் கொடுமையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வீடியோ மூலம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை வெளியுலகிற்கு தெரிய வந்தது. மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அஜய் குமார், வினோத் குமார், ராஜ குமார், ரோஹித் குமார், கணேஷ் குமார் மற்றும் ராகுல் குமார் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More News >>