திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் 750 பேர் கைது

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 750 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.மேலும் ஓய்வு பெறும் ஊழியருக்கு ஒட்டுமொத்தத் தொகையாக அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சமையலர், உதவியாளர், சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.அல்போன்ஸ் தலைமையிலான 750 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவிக்கப்பட்டனர்.

More News >>