அமெரிக்காவில் 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த இந்திய தம்பதியினர்!

அமெரிக்காவில் சுற்றி பார்க்க சென்ற இந்திய தம்பதியினர், 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத், 2006 ஆம் ஆண்டு செங்கன்னூரில் உள்ள பொறியியல் கல்லூரியில்  கணினி பொறியியலில் பட்டம் பெற்று  பணிக்காக சமீபத்தில் தனது மனைவி மீனாட்சி மூர்த்தியுடன்  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடிபெயர்ந்தார்.

அடிக்கடி சுற்றுலா செல்லும் இருவரும், மலைகளில் நின்று எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை தங்களது பேஸ்புக் பக்கங்களிலும், ப்ளாகிலும் பதிவு செய்து வந்தனர். மீனாட்சி ஹாரி பாட்டரின் தீவிர ரசிகை அதனால் தான் தலை முடியை இளஞ்சிவப்பு வண்ணமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் பிரபல யோசிமிட்டி தேசிய பூங்காவிற்கு இருவரும் சென்றதாக தெரிகிறது. அப்போது டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்தில் புகைப்படம் எடுக்கும் போது அங்குள்ள 800 அடி பள்ளத்தாக்கில் இருந்து இருவரும் விழுந்ததாக தெரிகிறது.

டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு கீழே அவர்களது உடல்களை கடந்த வியாழனன்று பூங்கா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த தம்பதி என நேற்று அடையாளம் காணப்பட்டது. யோசிமிட்டி தேசிய பூங்காவின் முக்கிய பகுதிகளை டாஃப்ட் பாயிண்ட்டில் இருந்து பார்க்க முடியும் என்பதால், சுற்றுலா பயணிகள் அங்கு புகைபடம் எடுக்க வருவது வழக்கம். அந்த இடத்தில், இரண்டு பேரும் எப்படி விழுந்து இறந்தனர் என்பதை தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

"அவர்களுக்கு என்ன ஆனது என எங்களுக்கு தெரியவில்லை,கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். அங்கு என்ன நடந்தது என்று நமக்கு தெரியாமலே கூட போகலாம். ஆனால் தற்போதைக்கு இது எதிர்பாராத விதமாக நடந்த துயரச் சம்பவம் என கருதுகிறோம்" என பூங்காவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>