டி20 போட்டியில் மூன்று சதங்கள் விளாசி நியூசி. வீரர் அபார சாதனை
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டி20 போட்டியில் மூன்று சதங்கள் விளாசி கொலின் மன்றோ சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று 03-01-18 அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கொலின் மன்றோ 53 பந்துகளில் [10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்] 104 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 16.3 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர்களான வால்டன் மற்றும் கிறிஸ் கெயில் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் ஒரு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொலின் மன்றோ சாதனை:
* இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூல டி20 போட்டியில் மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக எவின் லெவிஸ், கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா, பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் இரண்டு முறை சதம் விளாசியுள்ளனர்.
* அதேபோல ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் கோரி ஆண்டர்சன் உடன் இணைந்துள்ளார். இருவரும் 10 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். கோரி ஆண்டர்சன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
* இந்த போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதம் விளாசியவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். பிரெண்டன் மெக்கல்லம் 50 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.
* கொலின் மன்றோ கடைசியாக ஆடிய மூன்று டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதேபோல பிரண்டன் மெக்கல்லமும் தொடர்ச்சிய மூன்று டி20 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
* மூன்று போட்டிகளிலும் சேர்த்து கொலின் மன்றோ 223 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மஸகட்சா [222 ரன்கள்] சாதனையை முறியடித்தார்.