ஜனவரி குடியரசு தின கொண்டாட்டம்: டிரம்ப் பங்கேற்கவில்லை

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க இயலாத நிலை உள்ளது என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, இரு தரப்பு வருகையாக இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த ஜூலை மாதம் இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், இந்தியாவிலிருந்து அதிபர் டிரம்புக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

கடந்த திங்கள்கிழமை, அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர், "2019 ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப்பை அழைத்துள்ளார். இதை மிகவும் கௌரவமாக கருதுகிறோம். ஆனாலும், அதிபர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளின் காரணமாக, குடியரசு தின விழாவில் பங்கேற்பது இயலாது," என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்ற வேண்டியுள்ளது காரணமாகவே இந்த அழைப்பை ஏற்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் சமயத்தில்தான் ஜனவரி மாதம் கடைசி வாரம் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். இதில் பங்கேற்க வேண்டியுள்ளதன் காரணமாகவே அதிபரின் இந்திய வருகை தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

"அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான உறவு நன்முறையில் உள்ளது. வெகு விரைவில் இந்திய பிரதமரை நேரில் சந்திக்கும் நாளை அதிபர் டிரம்ப் எதிர்நோக்கியுள்ளார்," என்றும் அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

More News >>