மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு தாவிய பா.ஜ. கட்சியின் பணக்கார எம்.எல்.ஏ.
மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஒருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் டெண்டுகேடா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் சர்மா காங்கிரஸில் இணைந்துள்ளார். 2003 மற்றும் 2013ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றுள்ளார். மத்திய பிரதேச சட்டப்பேரவையிலுள்ள பணக்கார உறுப்பினர்களில் 65 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சஞ்சய் சர்மா மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இந்த முறை பாரதீய ஜனதா கட்சி, தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்காது என்று எண்ணி சஞ்சய் சர்மா காங்கிரஸ் பக்கம் கண்ணை திருப்பியதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கமல் நாத், பரப்புரை குழு தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி ஆகியோர் முன்னிலையில் சஞ்சய் சர்மா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கட்சியில் இணைந்தார்.
அவருடன் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கமலாபட் ஆர்யாவும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.