ரிசர்வ் வங்கி மத்திய அரசு மோதல்! நிர்வாகத்தில் பாஜகவின் தலையீடா?
தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கிக்கு, நாட்டின் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு சுயமாகவே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் அதிகரித்தது. கடந்த வாரம் அது வெளிப்படையாக தெரிந்தது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் அரசுகள் தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, ரிசர்வ் வங்கியின் தாராள கடன் கொள்கைகளால்தான் 2008 முதல் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாராக்கடன் பல லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது என்று குற்றம்சாட்டினார்.
ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7ன் படி, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் நலன் பொருட்டு சில வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கிக்கு வழங்க முடியும். இந்த சட்டப்பிரிவு இதற்கு முன்பு நெருக்கடியான காலகட்டத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த சட்டப்பிரிவை பயன்படுத்தியே மத்திய அரசு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அண்மையில் பல கடிதங்களை அனுப்பியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பண்டிகை காலம் மற்றும் தேர்தல்கள் நெருங்குவதால் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் நலிவடைந்த வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கவும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எளிதில் கடன் பெறவும் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது கொள்கைகளை தளர்த்த மறுத்ததால் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து யோசித்து வருவதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் அவசியமானது என்றும், அதனை மதிப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் பரஸ்பரம் பல்வேறு விவகாரங்களை அவ்வப்போது ஆலோசித்து முடிவு எடுத்து வரும் நிலையில், மத்திய அரசு ஒருபோதும் பொதுவெளியில் அந்த விவகாரங்களை விவாதித்ததில்லை என நிதியமைச்சகம் விளக்கியுள்ளது.