80 வயது தாண்டிய முதியோருக்கு ஓய்வூதியம் வீடு தேடி வரும்: தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் 80 வயது தாண்டிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோருக்கு ஓய்வூதியம் இனி வீடு தேடி வரும் என்று தமிழக அரசு அறவித்துள்ளது.

தமிழகத்தில், 60 வயது தாண்டிய முதியோருக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள், நேரடியாக அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று கையெழுத்துட்டு பணம் பெற்று வருகின்றனர். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஓய்வூதியம் பெற்று வருவதில் சிரமம் உள்ளதால் தமிழக அரசு வீடு தேடி ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான அரசாணையையும் நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிகளில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வு கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், 80 வயதினை கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர அறிவுறுத்தினார்கள். அதன்படி, தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 80 வயதை கடந்த 1,83,308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் அறிவுரையின்படி வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பண அஞ்சல் (மணியார்டர்) மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>