தீபாவளி முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை ஜோர்

தீபாவளி வரும் 6ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விடுக்கபட்ட நிலையில் தற்போது தான் பட்டாசு விற்பனை வேகமெடுத்துள்ளது. சென்னை நகர் முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய சுமார் 900 தற்காலிக கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை விட சுமார் 740 கடைகள் குறைவாக இந்த ஆண்டு 4900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தீயணைப்புத்துறை இயக்குனர் மஹேந்திரன் உத்தரவின் பேரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டது. அதன்படி, கான்க்ரீட் கட்டடங்களில் மட்டுமே பட்டாசு கடைகள் அமைக்கப்படவேண்டும், கூரையோ, பந்தலோ அமைத்து கடைகள் அமைக்க கூடாது. நடைபாதையில் கடை வைக்கக்கூடாது. உயரழுத்த மின்கம்பி இருக்கும் இடத்தில் கடையமைக்க கூடாது. அடுக்கு மாடி கட்டடங்கள் இருக்கும் இடத்தில் தற்காலிக கடையமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், சமையல் கியாஸ் குடோன், பெட்ரோல் நிலையங்கள் அருகில் போன்ற மக்கள் அதிகளவில் இருக்கும் இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் தீயணைப்பு கருவி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து இல்லாமல் மக்கள் இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய கட்டுப்பாடுகளுடன் தீயணைப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. சென்னையில் 4 இடங்களில் மட்டுமே தீவிபத்து ஏற்பட்டது. இந்த ஆண்டு எந்த ஒரு விபத்தும் இல்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

பட்டாசு கடைகள் வைத்துள்ளவர்கள் விதியை மீறினால் அவர்கள் மீதி உடனடி நடவடிக்கை எடுக்க தீயணைப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து சென்று கடைகளை கண்காணிப்பார்கள்.

More News >>