இணையதளங்களில் மருந்து விற்பனை செய்ய இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தில், விநியோகஸ்தர்கள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுவரை ஆன்-லைன் விற்பனை மூலம் வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் மட்டுமே விற்பனை செய்து வந்த தளங்கள் தற்போது மருந்துகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் தீங்கை விளைவிக்க நேரிடும்.
காரணம், போலியான, காலாவதியான மருந்துகளையும், தரமற்ற மருந்துகளை கூட பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நேரிடும். மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் மற்றும் மருந்துக்கடை சட்டத்தின் படி இதுபோன்ற ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய முடியாது.
இதுபோன்ற ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யும் பல அலுவலகங்கள் வெளிநாட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் இந்திய சட்டங்களை பின்பற்றுவது இல்லை. ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.
ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து அப்படி விற்பனை செய்யும் விற்பனை தளங்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி விற்பனை செய்வதால் நேரடியாக ஆயிரக்கணக்கான மருந்து விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து பின்னர் நாடு முழுவதும் இவ்வாறு ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்யும் இணையதளங்களை தற்காலிகமாக நவம்பர் 9ம் தேதி வரை விற்பனை செய்ய இடைக்கால தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.